30 ஜூலை, 2011

நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும்.. டும்.... டும்..

நம்முடைய மொழி, பண்பாடு, இலக்கியம், சமயம் ஆகியவற்றில் ஈராயிரம் ஆரியர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ள சில பொய்மைகளையும் அவற்றிற்கான ஆதாரப்பூர்வமான மறுப்புகளையும் மொழியறிஞர் திரு. சாத்தூர் சேகரன் அவர்கள் “சிந்துவெளி நாகரிகம்” என்னும் தமது நூலில் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
பெரிய பொய்மைகள்:
1.  திருவிட மக்களும் ஆரியரும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து வந்தனர்.  இஃது பொய்.  குமரிக்கண்ட தமிழரே உலகெங்கும் பரவினர்.  சிந்துவெளி தமிழரே மேற்கேயும் வடக்கேயும் பரவினர்.
2. இந்தியாவின் தாய்மொழி சமஸ்கிருதமே.  இது மாபெரும் பொய்.  இந்தியாவின் நான்கு மூலைகளிலும் ஒரு நாள் ஒரு பொழுது கூடப் பேசப்படவில்லை.  சமஸ்கிருதம் இந்தியாவிற்கு வெளியேயும் பேசப்படவில்லை.
3. சமஸ்கிருதம் ஒரு தொன்மையான மொழி.  இதுவும் ஒரு பயங்கரமான பொய்.  கி.பி. 200க்கு முன்பாக சமஸ்கிருதம் இருந்தது என்பதற்கு ஒரு சான்று கூடக் கிட்டவில்லை.
4. ஆரிய இனம் உயர்ந்த இனம்.  இதுவும் முழுப்பொய்.  உலகில் ஆரிய இனம் என்ற ஒன்று கிடையாது என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.  ஆனாலும் பிராமணப் பண்டிதர்களும் ஐரோப்பிய இன வெறியர்கள் சிலர் மட்டுமே தமது நூல்களில் தாம் உயர்ந்தவர் என்று கூறி வருகின்றனர்.
ஆனால் உலகில் உள்ள பல்வேறு வரலாற்று அறிஞர்கள் இன்னமும் பொய்யும் புழுகுமாக அரங்கேற்றப்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் ஆய்வு நூல்களில் இருந்து ஆரியர் பற்றிய பொய்ச்செய்திகளை வெளியேற்றிடவில்லை.  சமஸ்கிருத மொழி பற்றிய அறிஞர்களின் கருத்துகளைக் காண்போம்.  சமஸ்கிருதம் தொன்மையான மொழி அன்று என சமஸ்கிருதம் தொடர்பான அறிஞர்களின் புதிய ஆய்வுக் கருத்துகளை முனைவர் தெ. தேவகலா அவர்கள் ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறிஸ்தவ நாடே… எவ்வாறு?’ என்னும் நூலில் சுட்டிக் காட்டுகின்றார்.
சமஸ்கிருதம் பற்றிய விளக்கங்கள்:
  1. சமஸ்கிருதம் என்பது ஆரியர்களின் மொழி என்று பொதுவாக நம்பப்படுகிறது.  சமஸ்கிருதம் தான் உலகின் முதல் மொழி – மிகப் பழமையான மொழி என்று பரப்பியவர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சர். வில்லியம் ஜோன்ஸ் மற்றும் மாக்ஸ்முல்லர் ஆவர்.
  2. ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அசோக மன்னனின் கல்வெட்டுகள், விலங்கு பலி தடை குறித்து எழுதப்பட்ட பொழுது அக்காலத்தில் வழக்கில் இருந்த இந்திய மொழிகளிலும் அவரது அரசாட்சியில் இருந்த வெளிநாட்டு மொழிகளான கிரேக்க, அரமேய மொழிகளிலும் எழுதப்பட்டு உள்ளன.  ஆனால் அசோகரின் கல்வெட்டு ஒன்று கூட சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை.
  3. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் இருந்திருந்தால் அது ஆரிய மொழியாகவும் இருந்திருந்தால், ஆரிய வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் ‘விலங்கு பலி தடை செய்யப்பட்டது’ என்ற செய்தியை, கல்வெட்டுகளில் எழுதுவதற்கு அசோக மன்னன் சமஸ்கிருதத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.  ஆனால் சமஸ்கிருதத்தில் காணப்படாமை நோக்கற்குரியது.
  4. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் சமஸ்கிருத கல்வெட்டுகள் காணப்படவில்லை.  கி.பி. 150 இல் தான் முதல் சமஸ்கிருதக் கல்வெட்டு காணப்படுகிறது.
  5. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் இந்தியாவிலுள்ள கல்வெட்டுகளில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், அரமேயம் போன்ற மொழிகள் காணப்படுகின்றனவே தவிர சமஸ்கிருதம் காணப்படவில்லை.
  6. சமஸ்கிருதம் மக்களின் பேச்சுமொழியாக இருந்ததில்லை.
‘சமஸ்கிருதம்’ என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது’ அல்லது ‘செம்மை செய்யப்பட்டது’ என்பது பொருள்.
“எனவே கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளின் தொடக்கக்காலத்தில் இந்தியாவில் இருந்த இந்திய மொழிகளாகிய தமிழ், பாலி, அர்த்தமாகதி மற்றும் அயல்மொழிகளாகிய பாரசீகம், கிரேக்கம், இலத்தீன், அரமேயம் ஆகிய மொழிகளைக் கலந்து உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்”
“நாட்டில் பல்வேறு மொழி பேசுவோர்க்கும் வேதாந்தக் கருத்தினைப் பரப்புவதற்காக அறிஞர்களால் உருவாக்கப்பட்டதே சமஸ்கிருத மொழி.   இந்தியாவில் அப்போது வழக்கத்தில் இருந்த சமணர்களின் மொழியாகிய அர்த்தமாகதி, பெளத்தர்களின் மொழியாகிய பாலி, திராவிட மொழிகளின் மூல மொழியாகிய தமிழ், இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் மொழியாகிய பாரசீகம், இலத்தீன், அரமேயம் மற்றும் கிரேக்க மொழிகள் போன்றவற்றின் கலப்பு மொழியாக – சமயக் குறியீட்டு மொழியாக உருவாக்கப்பட்டதே சமஸ்கிருதம்.  எனவே இது செயற்கை மொழியே அன்றி இயற்கை மொழி அன்று” (இந்தியா தோமாவழி திராவிடக் கிறிஸ்தவ நாடே… எவ்வாறு? தெ. தேவகலா).
இவ்வாறு பல்வேறு மொழி பேசுகிறவர்களுக்கு உயரிய கருத்துகளை போதிப்பதற்காக, நம் அறிஞரால் உருவாக்கப்பட்ட மொழியாகிய சமஸ்கிருதம், தமிழ் மட்டுமே பேசுகின்ற தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்துக் கோயில்களில் வழிபாட்டு மொழியாக இருப்பது அர்த்தமற்ற மூடத்தனமான செயல்.  இது குறித்து தமிழ் மக்களும் கவலை கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது.  மக்களுக்கு ஒன்றும் புரியாத, தங்களுக்கும் சரியாக அர்த்தம் விளங்காத மந்திரங்களை ஓதிக்கொண்டு, வழிபட வருகின்ற மக்களுக்கும் கடவுளுக்கும் தடைச்சுவராக இருந்து கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிற பிராமண அர்ச்சகர்கள் கோவில்களை விட்டு விரைவில் வெளியேற்றப்பட வேண்டும்.  தமிழில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் ஆலயங்களுக்குள் சென்று அர்ச்சனை செய்திட தமிழர்கள் எல்லோரும் விழிப்புணர்வு கொண்டு வழி ஏற்படுத்த வேண்டும்.
ஆண்டுகளாக ஆரியர் செய்துவருகின்ற தீர்ப்புகள், புனைவுகள் இவற்றைக் கண்டறிந்து உண்மையை நிலைநாட்டும் விதமாக, இன்று நடுநிலையான ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.  இவ்வுண்மைகளை அறிந்து நமது இலக்கியத்திலும் மெய்யியல் கோட்பாடுகளிலும் புகுத்தப்பட்டுள்ள போலிகள், குழறுபடிகளை நீக்கித் தமிழர் சமயத்தையும் தமிழர் ஆன்மவியலையும் ஆரியப் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது கற்றறிந்த தமிழ்ச்சான்றோரின் தலையாயக் கடமையாகும்.
(கட்டுரை: - அருட்சகோதரி எழிலரசி, தமிழர் சமயம் ஜூன் 2011 இதழில் வெளியானது)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக