தமிழர் சமயம்
தந்தை
பெரியார் காலத்திற்குப் பின் வாழும் நாம் நம் காலத்தில் தந்தை பெரியாரின்
நோக்கத்தைப் புரிந்து கொண்டு, திராவிட இனத்தின் தலைமை நிலையில் இருக்கும்
தமிழ் இன எழுச்சிக்குத் தமிழர் சமயமாகிய இந்து மதத்தின் சிறப்புகளைக் கற்றுக் கொண்டு உலகம் முழுவதுக்கும் உணர்த்தும் பணியை விரும்பி ஏற்றுச் செய்தாக வேண்டும். ஏனெனில் தமிழர்
சமயம் என்பது உலகில் இருக்கும் மதங்களில் இதுவும் ஒரு மதம் இல்லை.
உலகிலுள்ள மதங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு பொதுப்பெயர் கொடுத்தால்
எந்தப் பெயர் அதற்குப் பொருந்துமோ அந்தப் பெயரே தமிழர் சமயம் என்பது ஆகும்.
இந்தச் சிறப்புமிக்க வரலாற்று உண்மை மறைந்து கிடக்கிறது. காரணம் தமிழன் இந்துத்துவாக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையில் மயங்கி அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு கொண்டிருக்கிறான்.
தமிழனுடைய
மயக்கத்தை நீக்கி, அடிமையாய் இருப்பதில் சுகம் காணும் அவனை விடுவித்தல்
அவ்வளவு எளிதான செயல் அன்று. அதற்குரிய திட்டங்களைத் தீட்டி அவற்றைச்
செயல்முறைக்கும் கொண்டு வர வேண்டும்.
இதற்குத்
தமிழர் சமயத்தைப் புரிந்து கொண்ட மக்கள் ஒன்று சேர்க்கப்படல் வேண்டும்.
தமிழர் சமயத்தைப் புரிந்து கொண்ட மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, அது ஓர்
ஆன்மீக இயக்கமாகச் செயல்பட வேண்டும்.
தமிழ் மண் – தமிழ் நாடு
தமிழர்
சமயத்தை அடுத்துத் தமிழ் மண் பாதுகாக்கப்படல் வேண்டும். தமிழ் மண் என்று
கூறும்பொழுது தமிழ்நாடு நம் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு தமிழன் கையில்
தானே இருக்கிறது என்னும் எண்ணம் ஏற்படலாம். தமிழ்நாடு தமிழன்
கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. தமிழர் அல்லாதார்கள் தமிழ் மண்ணை
உரிமையாக்கும் முயற்சி வேகம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த
நிலை நீடித்தால் தமிழ் நாட்டில் தமிழன் அகதியாகும் நிலை உருவாகும்.
தமிழ்நாட்டிலிருந்து தமிழன் விரட்டப்படும் நிலையும் உருவாகும் என்பதில்
ஐயம் இல்லை.
இது
தமிழரல்லாத வேற்றவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு இந்திய இறையாண்மைக்குட்பட்டு இருப்பதால், எவ்வித எதிர்ப்பும்
இல்லாமல் தமிழ்மண் தமிழனிடமிருந்து பறிபோய்க் கொண்டிருக்கிறது.
தமிழகம்
இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தபோதிலும், தமிழ் இனம்
அழியாமல் பாதுகாக்கப்பட அதற்கென்று அது வாழ மண் தேவை. தமிழ் மண்
பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மண் பாதுகாக்கப்பட இந்தியாவில்
காசுமீருக்குச் சிறப்பு உரிமை இருப்பதைப் போன்று தமிழ்நாடும் சிறப்பு
உரிமையைப் பெற்று ஆக வேண்டும்.
அதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவை செயல் வடிவத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக