2 ஆக., 2011

இந்துத்துவா உருவான வரலாறு - 3

இந்துமதம் என்னும் பெயர் வந்த வரலாற்றுப் பின்னணி

கி.பி. 1750க்குப் பின்னர் ஆங்கிலேயர் இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்து ஆளத் தொடங்கினர்.  அப்போது ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளுக்குத் தலைநகராகக் கல்கத்தா விளங்கியது.  ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது.  அதனால் நீதிமன்றங்களை அமைத்தார்கள்.  நீதிமன்றங்களில் நீதி வழங்கச் சட்டம் தேவைப்பட்டது. 

ஆங்கிலேயர் ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களில், கிறித்தவர்களுக்கு நீதி வழங்க பைபிள் அடிப்படையிலான கிறித்தவச் சட்டம் (Christian Law) இருந்தது.  இசுலாமியர்களுக்கு நீதி வழங்க, குரான் அடிப்படையிலான இசுலாமியச் சட்டம்(­Islamic Law) இருந்தது.  ஆனால் கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கு நீதி வழங்க, சட்டப் புத்தகம் எதுவும் இல்லை.  இதனால் நீதி வழங்குவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன. 

இந்த நிலையில் கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆங்கிலேயரான சர் வில்லியம் சோன்சு(Sir William Jones) அமர்த்தப்பட்டார். 

கல்கத்தாவில் இருந்த பிராமணர்கள், தந்திரமாக, மனுநூலை, சோன்சிடம் கொடுத்து அதுவே இந்திய மக்களின் சட்ட நூல் என அவரை ஏமாற்றி நம்ப வைத்தார்கள். 

அவர், பிராமணர்கள் கூறியதை நம்பி, சமற்கிருதத்தில் இருந்த மனுநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  மனுநூலின் அடிப்படையில, கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கான சட்டத்தை உருவாக்கி, அதற்கு இந்துச் சட்டம்(Hindu Law) எனப் பெயரிட்டார். 

இந்துச் சட்டம் உருவாக்குவதற்கு உதவிய மனுநூலின் கொள்கைகளுக்கு இந்துத்துவம் (Hinduism) என்னும் பெயரைக் கொடுத்தார்.  மனு நூலின் அடிப்படைக் கொள்கை சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கை ஆகும். 

Hinduism அல்லது இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  இது ஒரு வாழ்க்கை முறை.  ஆரிய வாழ்க்கை முறை ஆகும். 

ஆனால் Christian Law, Muslim Law, Hindu Law  என்று குறிப்பிடும்பொழுது Muslim, Christian என்ற பெயர்கள் மதங்களைக் குறிப்பதைப் போன்று Hindu என்னும் பெயரும் ஒரு மதத்தைக் குறிப்பதைப் போன்ற தவறான எண்ணத்தை இந்திய மக்கள் உள்ளங்களில் உருவாக்கி விட்டது.  இதன் காரணமாகக் கிறித்தவர், முசுலீம் அல்லாதவர் இந்து மதத்தினர் (Hindu Religion) என்னும் தவறான எண்ணத்தை அது ஏற்படுத்தி விட்டது.

இந்திய மதங்களில் ஏற்கெனவே சைவமும் வைணவமும் இந்துத்துவமாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்தமையால் இந்த இரண்டு மதங்களுக்கும் பொதுப் பெயராகப் புதிதாக இந்து மதம் (Hindu Religion) என்னும் பெயர் உருவாகி, இந்திய மக்கள் மத்தியில் வழக்கில் வந்தது.  ஆகவே சோன்சால் உருவாக்கப்பட்ட Hinduism என்னும் பெயர் வேறு, அதைத் தவறாக மக்கள் புரிந்து கொண்டு அந்தத் தவற்றின் காரணமாகப் பெற்றெடுக்கப்பட்ட Hindu Religion என்னும் பெயர் வேறு.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக