1 ஆக., 2011

திருநீறா? சிலுவையா? - 3

சாம்பலும் உயிர்த்தெழுந்த உடலும்

செங்கிடாரி ஊருக்கு வெளியே பலியிடப்பட்டுத் தகனம் செய்யப்பட்டு சாம்பல் உருவாக்கப்பட்டது போன்று, இயேசு கிறித்துவும் எருசலேமுக்கு வெளியே பலியிடப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.  உயிர்த்தெழுந்த இயேசுவைப் போன்று சாம்பல் விளங்குகின்றது.  எவ்வாறு?
கொல்லப்பட்டு எரிக்கப்படுவதற்கு முன்னருள்ள கிடாரியின் உடல் வேறு; எரிக்கப்பட்ட பின்னருள்ள கிடாரியின் உடல் வேறு.  எரிக்கப்பட்ட பின்னருள்ள கிடாரியின் உடல் சாம்பல் வடிவில் இருக்கிறது.  சாம்பலை மேலும் எரித்து அழிக்கவோ அல்லது இல்லாமல் ஆக்கவோ இயலாது.
சாம்பல் உயிர்த்தெழுந்த உடலைப் போன்றது.  பாவ நிவர்த்திக்கு உரியதாக விளங்குகின்றது.  இரத்தம் பாவ நிவர்த்திக்குப் பயன்படுவதைப் போன்று சாம்பலும் பாவ நிவர்த்திக்குப் பயன்பட்டது.  இரத்தம் ஒரு நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  இயேசுவின் இரத்தம் தொடர்ச்சியாகப் பயன்படுவதற்குக் காரணம், உயிர்த்தெழுந்தமையாலேயே!  உயிர்த்தெழுதல் இல்லையென்றால் பாவப் பரிகாரம் இல்லை.  ஆகவே உயிர்த்தெழுதலும் சாம்பலும் தொடர்ச்சியாகப் பாவ நீக்கத்திற்குப் பயன்படுகின்றன.  சாம்பல் வேறு; உயிர்த்தெழுந்த உடல் வேறு.  ஆனால் இரண்டும் செயல்பாட்டில் ஒன்று. 
உயிர்த்தெழுந்த உடல் பழைய உடல் அல்ல.  அதை இனி யாரும் அழிக்க இயலாது.  அதைப் போலவே சாம்பலையும் இனி யாரும் அழிக்க இயலாது.  அதனால் இந்த சாம்பலில் அல்லது திருநீற்றில்
  1. மரணம்
  2. உயிர்த்தெழுதல்
  3. பாவ மன்னிப்பு ஆகிய மூன்று நிலைகளும் அடங்கியிருக்கின்றன. 

திருநீறு: கிறித்துவுக்கு முன்னும் கிறித்துவுக்குப் பின்னும்
மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்று நிலைகளையும் அடக்கிய திருநீறு, கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்னர் யூத மதத்தில் பாவ நிவர்த்திக்காகப் பயன்படுத்தப்பட்டது.  இது கிறித்துவின் பலியை முன் அடையாளமாகக் குறிப்பதாகக்கொள்ளலாம்.  யூத மதம் கிறித்துவின் பலியை ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிறித்துவிற்குப் பின்னரும் பழைய நிலையைத் தொடர்வது இயல்பே!

ஆனால் கிறித்துவின் பலியை ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்புப் பெற்று இரட்சிக்கப்பட்ட கிறித்தவர்கள் புதிய நிலையில் சாம்பல் அல்லது திருநீற்றைப் பயன்படுத்தினார்களா? என்பது இப்பொழுது நோக்கத்தக்கதாய் இருக்கிறது.

கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் பாடு மரணத்தைத் தியானம் செய்யும் தபசு காலத்தின் தொடக்க நாளைத் “திருநீற்றுத் திருநாள்” என்று குறிப்பிட்டு, திருநீற்றை அணிந்த மரபை முன்னர் பார்த்தோம்.  மேலும் ஐரோப்பியக் கிறித்தவர்களும் ஐரோப்பிய வழிக் கிறித்தவர்களும் கான்சுடன்டைன் காலம் முதல் இயேசு கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் குறிக்கும் அடையாளமாகச் சிலுவையைப் பயன்படுத்தி வருவதையும் அது தவறு என்பதையும் பார்த்தோம்.
-                                                                                                                                                          - தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய ‘சிலுவையா? திருநீறா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக