(தேநீர்க் கடைத் திண்ணை - காலை வேளை - முருகனும் குமரனும் பேசிக்கொள்கிறார்கள்)
முருகன்: (செய்தித்தாள் தலைப்பை உரக்க வாசிக்கிறார்) ''சம்ச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் -தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு”
குமரன்: (அப்போது தான் வந்து உட்கார்கிறார்) அது என்னவோ சமச்சீர் கல்வி?
முருகன்: செய்தித்தாளில் பதித்திருந்த கவனத்தை விட்டு இலோசாக நிமிர்ந்து பார்த்தபடியே) அடடே! குமரனா? வாப்பா! வா! என்ன பார்த்து நாலஞ்சு நாளாச்சு! ஆளையே காணாமே!
குமரன்: ஆமாணே! வெளியூர் போயிருந்தேன்!
முருகன்: என்ன? ஏதும் விசேசமா?
குமரன்: விசேசம் ஒன்னுமில்லண்ணே! அஞ்சு நாள் திருப்பூந்துருத்தியில் வச்சு திருக்குறள் சொல்லிக் கொடுத்தாங்க.
முருகன்: அஞ்சு நாள் திருக்குறள் வகுப்பா? அப்ப திருக்குறளைக் கரைச்சுக் குடிச்சிட்டேன்னு சொல்லு
குமரன்: அட! கேலி பண்ணாதீங்கண்ணே!
முருகன்: கேலி பண்ணலடே! உண்மையைத் தான் சொல்றேன். இந்தக் காலத்துல ஒருத்தர் அஞ்சு நாள் ஒதுக்கித் திருக்குறள் படிச்சார்னு சொன்னா ஆர்வமில்லாமலா போய்ப் படிச்சிருப்பாரு! அதத்தான் சொன்னேன்.
குமரன்: திருக்குறள் வகுப்பு இருக்கட்டும் - மொதல்ல சமச்சீர் கல்வினா என்ன? அதச் சொல்லுங்கண்ணே! எங்க போனாலும் இதே பேச்சாத்தான் இருக்கு!
முருகன்: என்ன தம்பி! திருக்குறள அஞ்சு நாள் படிச்சிட்டு வந்து சமச்சீர் கல்வி னா என்னன்னும் கேட்கறியே!
குமரன்: திருக்குறளுக்கும் சமச்சீர் கல்விக்கும் என்ன தொடர்பு?
முருகன்: இல்லாமலா சொல்றேன் தம்பி! சமச்சீர் னா என்ன?
குமரன்: (முறைத்துக் கொண்டே மெல்லிய குரலில்) அதத் தானே நான் இப்ப கேட்டேன்! திரும்ப என்கிட்டயே வா?
முருகன்: முறைக்காதே தம்பி! கல்வி எல்லாருக்கும் சமமா இருக்கணும்! ஏழைக்கு ஒரு கல்வி - பணக்காரனுக்கு ஒரு கல்வினு இருக்கக் கூடாது. அதே சமயம் சமமான கல்வி நல்ல தரமா சீராகவும் இருக்கணும். இது தான் சமச்சீர் கல்வி!
குமரன்: ஓ! இது தானா சமச்சீர் கல்வி! இப்ப விளங்கிருச்சுண்ணே! அது சரி! திருக்குறளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
முருகன்: இல்லாமலா பின்னே! திருவள்ளுவர் பிறப்புல எல்லா உயிரும் சமம் னு சொல்றாரா இல்லையா?
குமரன்: ஆமா! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ஃனு ஒரு திருக்குறள் தொடங்குமே!
முருகன்: ஆமா! அப்படினா சமமான குழந்தைகளுக்குச் சமமான சீரான கல்விதானே சரிப்பட்டு வரும்!
குமரன்: அட! அட! அட! இப்படி ஒரு விளக்கத்த திருக்குறளுக்கு இதுவரை நான் கேட்டதே இல்லண்ணே!
முருகன்: விளக்கம் இல்ல தம்பி! திருக்குறள அன்றாட வாழ்க்கையோட பொருத்திப் பார்க்குறோம் அவ்வளவுதான்!
குமரன்: எப்படிண்ணே! உங்களுக்குத் திருக்குறள் பத்தி எல்லாம் தெரியுது! நீங்க திருக்குறள் படிச்சு நான் பார்த்தே இல்லயே!
முருகன்: நாம் என்னிக்குப்பா படிச்சோம்! நம்ம கிருட்டிணன் ஐயா வீட்டு வாசல்ல நாள் ஒரு திருக்குறள் னு எழுதிப் போடுவாங்க.. இதத் தவறாம படிச்சிருவேன்.. மத்த படி உன்னப் போல நாலு பேரு சொல்றத கேட்டுத் தான் தெரிஞ்சுக்கிறது 'கற்றிலனாயினும் கேட்க’னு திருவள்ளுவரே சொல்றாரே!
குமரன்: உங்களுக்குத் திருக்குறள் ல இவ்வளவு தெரியும் னு தெரிஞ்சிருந்தா உங்களயும் வகுப்புக்குக் கூட்டிட்டுப் போய் இருப்பேனே!
முருகன்: அதான் நீ போய்ட்டு வந்திருக்கியே! என்ன சொன்னாங்கன்னு சொல்லு! கொஞ்சம் தெரிஞ்சுக்கிடுவோம்!
குமரன்: தெய்வநாயகம் னு ஒருத்தர்! திருக்குறள் ஆராய்ச்சி எல்லாம் பண்ணிருக்காரு! ஆராய்ச்சி பண்ணி முனைவர் பட்டமெல்லாம் வாங்கிருக்காரு! அவர் தாம் பாடம் நடத்தினாருண்ணே!
முருகன்: பட்டமெல்லாம் சரி! பாடம் எப்படி இருந்திச்சு அதச் சொல்லு!
குமரன்: இது இல்லாமலாண்ணே சொல்லுவேன்! இது வரைக்கும் நம்ம படிச்ச திருக்குறள்ல இவ்வளவு பொருள் இருக்குன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!
(குமரன் சொல்லத் தொடங்குகிறார். குற்றாலச் சாரல் அடிக்கத் தொடங்குகிறது)
முருகன்: குமரா! சாரல் அடிக்குது! வா - கடைக்கு உள்ளே போயிரலாம்.
தேநீர்க் கடைக்காரர்: என்ன வழக்கமா அரை மணி நேரத்துல கூட்டத்த கலச்சிருவீங்க இப்ப சாரல் பாத்திட்டு உள்ளே வரீங்க..
குமரன்: திருக்குறள் னு சொன்ன உடனே அண்ணே உள்ளே கூப்பிடுறாரு - இல்லயாண்ணே!
முருகன்: (நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டே) தம்பி! இங்க வா! பாரு! இந்த மழையப் பத்திக் கூடத் திருவள்ளுவரு சொல்லிருக்காரு
குமரன்: (தெரியாதது போல) என்ன சொல்லிருக்காருண்ணே!
முருகன்: மழைய அமுதம்னு திருவள்ளுவர் சொல்லிருக்காருப்பா! என்ன அஞ்சு நாள் வகுப்புல இதச் சொல்லிக் கொடுக்கலியா?
குமரன்: அண்ணே! அமுதம் னா என்னண்ணே!
முருகன்: உனக்கு ஒன்னொன்னா விளக்குனாத் தான் விளங்கும் (மெல்லிய குரலில்) அஞ்சு நாள் உன்ன வச்சு பாடம் நடத்தினவரு என்ன பாடு பட்டிருப்பாரோ! தம்பி அமுதம் னா சாவைத் தராத உணவுன்னு பொருள்
சாவைத் தடுக்குமா?
|
குமரன்: அதாவது அமுதத்த சாப்பிட்டா நாம சாகவே மாட்டோம்னு சொல்றீங்க!
முருகன்: ஆமா தம்பி! சரியாப் புரிஞ்சுக்கிட்டே!
குமரன்: அப்ப மழைத் தண்ணிய குடிச்சா நாம சாகவே மாட்டோமாண்ணே!
முருகன்: என்ன தம்பி! இப்படிக் கேள்வி கேட்கிற?
குமரன்: ஆமாண்ணே! யார். எப்ப. எதைச் சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கோ ன்னு திருவள்ளுவர் சொல்றாரே!
முருகன்: ஆமா தம்பி! 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ னு திருக்குறள் சொல்லுது! சரி! உங்க வகுப்புல மழையப் பத்தித் திருக்குறள் சொல்றத என்னன்னு சொன்னாங்க?
குமரன்: சொன்னாங்கண்ணே! தெளிவாகச் சொன்னாங்க! திருவள்ளுவர் மழையப் பத்திக் குறளே சொல்லலன்னும் சொன்னாங்க!
முருகன்: என்ன தம்பி! இப்படிச் சொல்ற! பாடம் நடத்தினவரு ஆராய்ச்சி எல்லாம் பண்ணினவருன்னு சொன்னியே!
குமரன்: ஆமாண்ணே! திருவள்ளுவர் மழையைப் பத்தி சொல்றாருன்னு சொல்றீங்க!
முருகன்: என்ன தம்பி கேட்குற! கடவுள் வாழ்த்துக்கு அப்புறம் மழையின் சிறப்ப சொல்றாருன்னும் படிக்காதவன் கூடச் சொல்வானே!
குமரன்: கடவுள கும்பிட்டாலே போதாதா? அவரே மழையைத் தந்திருவாரு! அப்புறம் எதுக்குண்ணே மழையப் பத்தித் தனியா பாடணும்? இப்படிப் பாடினா அப்புறம் காத்து, நெருப்புன்னு ஐம்பூதங்களையும் வரிசையா பாடியிருக்கணுமே!
முருகன்: தம்பி! உன் கேள்வி சரியானது தான்! ஆனால் இரண்டாவது அதிகாரமே மழையின் சிறப்பு தானே! அப்புறம் ஏன் திருவள்ளுவர் அதைப் பாடியிருப்பாரு?
குமரன்: அது மழையின் சிறப்பா - வான் சிறப்பாண்ணே?
முருகன்: என்ன தம்பி! புதிர் போடுற? மழை நீரின் சிறப்பு வேற - வான் சிறப்பு வேறயா?
குமரன்: ஆமாண்ணே! அதே அதிகாரத்தோட கடைசித் திருக்குறள்ல திருவள்ளுவர் தெளிவாச் சொல்றாரே - நீர் வேற - வான் வேறன்னு!
முருகன்: என்ன திருக்குறள் பா அது?
(பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டுகிறார் குமரன்)
குமரன்: ''நீரின்று அமையாது உலகெனின் யார் யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு"
முருகன்: ஆமா! நீர் வேற - வான் வேறன்னு சொல்றாரு!
இதுக்கு உங்க வகுப்புல என்ன விளக்கம் சொல்லிக் கொடுத்தாங்க?
குமரன்: அண்ணே! 'வான்’ என்பது மழை இல்லண்ணே! அது கடவுளுடைய அருளாற்றல்! அதைத் தான் கிறித்தவர்கள் தூய ஆவின்னும் சைவத்தில் அருள் சக்தின்னும் சொல்றாங்களாம்! அப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்கண்ணே!
முருகன்: (திருக்குறள் புத்தகத்தைக் கையில் வாங்கியவறே) அப்புறம் ஏன் திருவள்ளுவர் 'மழை’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துறாரு!
குமரன்: ஆமாணே! கடவுளுடைய அருள் மழையைப் போலப் பொழியுதுன்னு சொல்றாரு!
முருகன்: ஏ! இந்த விளக்கம் நல்லாயிருக்கே! ஏதோ கொஞ்சம் புதுசா படிச்சிட்டு வந்திருக்க போல இருக்கே!
குமரன்: கொஞ்சம் இல்லண்ணே! நிறைய புதுசா படிச்சிட்டு வந்திருக்கேன்!
முருகன்: நிறையவா? வேறென்ன? (புத்தகத்தைக் கையில் புரட்டிய வாறே கேலியாக) நீத்தார்னு சொல்றதும் துறவி இல்லன்னு சொல்லிட்டாங்களா?
குமரன்: எப்படிண்ணே சரியாச் சொல்றீங்க?
முருகன்: சரியாச் சொல்றேனா?!?
குமரன்: ஆமாணே! மற்ற தமிழ் இலக்கியங்கள் பயன்படுத்தாத ஒரு வார்த்தையைத் திருவள்ளுவர் கடவுளுக்குப் பெயராகச் சொல்ராரு! என்ன வார்த்தை அதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!
முருகன்: என்ன தம்பி! புதிர் போடுற!
குமரன்: சரி நானே சொல்லிடுறேன்! என்கிற வார்த்தை தான் அது!
முருகன்: சரி! அது என்ன சிறப்பு?
குமரன்: இருக்கே! சிறப்பு இருக்கே!
முருகன்: என்ன தம்பி சிறப்பு!
குமரன்: ம்.. இருபத்தைந்தாவது திருக்குறளை எடுங்க
(முருகன் கையில் இருக்கும் திருக்குறள் புத்தகத்தில் இருபத்தைந்தாவது திருக்குறளைத் தேடுகிறார்)
முருகன்: எடுத்துட்டேன் தம்பி!
குமரன்: இங்கேயும் திருவள்ளுவர் 'ஐந்தவித்தான்’ என்கிற வார்த்தையைச் சொல்றாரா?
முருகன்: ('ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார்..’ எனத் திருக்குறளை மெல்ல முணுமுணுத்துக்கொண்டு) அட! ஆமா!
குமரன்: அப்படின்னா ஐந்தவித்தான் யாரு?
முருகன்: அப்ப ஐந்தவித்தான் - கடவுளைக் குறிக்கிற வார்த்தை போலத் தெரியுது!
குமரன்: போல இல்லண்ணே! கடவுளே தான்!
முருகன்: அப்ப நீத்தார் னு சொல்றது கடவுளையா?
ஐந்தவித்தான் |
குமரன்: ஆமாணே! கடவுள் மனுசனா பிறந்து நமக்காக உயிர் நீத்தாரா இல்லையா?
முருகன்: அது கிறித்து தம்பி! ஆனா நீ சொல்றது இந்து மதத்துக்குப் பொருந்துமா?
குமரன்: அண்ணே! கிறித்தவர்கள் சொல்றது வரலாறு! இந்து மதத்தில அதத்தான் புராணக்கதையா எல்லாருக்கும் புரியும்படியா பிள்ளையார் னு சொல்லி வச்சிருக்கு... கடவுளோட பிள்ளை னா என்ன, பிள்ளையார் என்ன? இரண்டும் ஒன்னு தாண்ணே!
முருகன்: அப்படின்னா 'கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை மூணும் 'தந்தை, தூய ஆவி, மகன்' என்று கிறித்தவத்தில் சொல்லப்படுறதையும் 'சிவன், சக்தி, குமரன்'னு சைவத்துல சொல்லப்படுறதையும் தான் குறிக்குதுன்னு சொல்றாங்களா?
குமரன்: அட! கப்புன்னு பிடிச்சுக்கிட்டீங்கண்ணே!
முருகன்: அப்படின்னா தம்பி! எனக்கொரு கேள்வி! 'இயல்புடைய மூவர்’ னு திருவள்ளுவர் சொல்றது இந்த மூணு பேரத் தான்னு சொல்றது சரிதானோ!
குமரன்: எப்படிண்ணே வகுப்புக்கே வராம நெத்தியடியா அப்படியே சொல்றீங்க.
முருகன்: தம்பி! நம்ம பாதிரியார் அமல்ராசு முன்னொரு முறை இங்க ஒரு கூட்டத்த கூட்டிருந்தாரு.. அவர் கூட்டத்தில யாரோ ஒருத்தர் சென்னையில் இருந்து வந்து இந்தக் கருத்த சொல்லிருக்காரு தம்பி! பெரிய அறிஞர்னு அவர அறிமுகப்படுத்துனதா
நினைவு!
குமரன்: இப்பத்தானே புரியது! அந்த யாரோ ஒருவர் தான் நான் சொன்ன ஆராய்ச்சியாளர் தெய்வநாயகம் ணே! அவர் தாம் அஞ்சு நாளும் வகுப்பு நடத்துனாரு!
முருகன்: அப்படிப் போடு அருவாள! அப்ப அவர் கூட அவர் பொண்ணும் வந்திருப்பாங்களே! அவங்க கூட பெரிய படிப்பெல்லாம் படிச்சு தன் வாழ்க்கையையே தமிழின விடுதலைக்கு ஒப்புக் கொடுத்துருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்!
குமரன்: ஆமாண்ணே! நீங்க சொல்றவங்க பேரு முனைவர் தேவகலா. அவர்களும் வந்திருந்தாங்க.. மொத்தத்துல ஒரு முப்பது முப்பத்தஞ்சு பேரு நாங்க பயிற்சி எடுத்துக்கிட்டோம்..
முருகன்: இன்னும் வேறென்னல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க தம்பி!
குமரன்: திருக்குறள் சொல்ற 'சான்றோர் யார்?’ என்பத நல்லா விளக்கமாச் சொன்னாங்க... இன்னொரு செய்திய நான் சொன்னா நீங்க அசந்து போவீங்க..
முருகன்: நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு!
குமரன்: என்ன சொல்லுங்க பார்க்கலாம்.
முருகன்: சரியா?
குமரன்: என்னென்ணே! நீங்க அசந்து போவீங்கன்னு பாத்தா என்ன அசர வச்சிட்டீங்க..
முருகன்: 'பொது மறையும் பொருள் இலக்கணமும்’ னு ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னோடி ஒருத்தர் புத்தகம் எழுதியிருக்காரு தம்பி! அத சின்ன வயசில படிச்சிருக்கேன்.. அத நினைவுல வச்சுத்தான் சொல்றேன்..
குமரன்: சரியாச் சொன்னீங்கண்ணே! அந்தப் புத்தகத்த எழுதினவரும் வகுப்பு நடத்துனவரும் ஓரே ஆளுதான்! சுத்தி வளைச்சி நம்ம இரண்டு பேரும் தெய்வநாயகம் ஐயாவோட ஆராய்ச்சிக் கருத்துகளத் தான் பேசிக்கிட்டு இருக்கோம்!
முருகன்: அப்படியா! பாரு! இப்படித் தான் எதையும் அரை குறையாப் படிக்கிறதால எழுதினவரு பேரு மறந்து போயிருது! சில சமயங்கள்ல கருத்தே விட்டுப் போயிருது! இனியாவது இத நான் திருத்திக்கிடணும்..
குமரன்: போங்கண்ணே! உங்களுக்குத் தன்னடக்கம் அதிகம்!
முருகன்: தன்னடக்கம் இல்ல தம்பி! உண்மையத் தான் சொல்றேன்... இவ்வளவு நாள் நானும் திருக்குறள் பத்திப் பல பேச்சுகள கேட்டிருக்கேன்.. ஆனா இன்னக்கி நீ சொன்ன கருத்துகள் எவ்வளவு புதுமையாவும் அதே சமயம் நூத்துக்கு நூறு பொருந்துறது போலவும் இருக்கு.. இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு திருக்குறளாவது படிக்கணும் னு நான் முடிவு பண்ணிருக்கேன். ஓய்வாயிருக்கும் போது பயிற்சி வகுப்புகள் ல கொடுத்த புத்தகங்களையும் குறிப்புகளையும் கொஞ்சம் கொடு.. நானும் படிக்கிறேன்.
குமரன்: கண்டிப்பாண்ணே!
(2011 ஜூலை பதினெட்டு முதல் இருபத்திரண்டு வரை திருப்பூந்துருத்தி கருணையானந்தர்
ஆசிரமத்தில் 'திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் அறிந்தவை பற்றிய ஒரு கற்பனை உரையாடல்) – கி. முத்துராமலிங்கம்
[முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “தமிழர் சமயம்” 2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -10,11,12 இல் வந்த செய்தி இங்கு வெளியிடப்பட்டுள்ளது]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக