3 ஆக., 2011

தமிழர் சமயமும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையும்

தமிழர்கள் ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக் கொள்கையாகிய இந்துத்துவா என்னும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தமிழர்களின் இந்து சமயமாகிய தமிழர் சமயம் ஆரியப் பிராமணர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.


தமிழ் இன வீழ்ச்சிக்குக் காரணம்
தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருப்பது தமிழர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுள்ள இந்துத்துவாவாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை ஆகும்.  இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை தமிழ் இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒன்றையொன்று வெறுக்கவும் பகைக்கவும் வீழ்த்தவும் தூண்டி மொத்த இனத்தையும் அழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

மலையகத் தமிழர்கள்
இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதென்றால், அதன் தொடக்கம் யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர் உள்ளங்களில் இருந்த சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மை என்பதை வரலாறு கூறுகிறது.  தமிழ் இனம் என்னும் அளவில் அவர்கள் இணைய இயலாதபடி அவர்களைப் பிரித்த முதல் எதிரி அதுவேயாகும்.  மலையகத் தமிழர்கள், குடியுரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பொழுது தமிழ் இன உணர்வோடு அதை எதிர்த்து யாழ்ப்பாணத் தமிழர்கள் குரல் கொடுக்க முன் வரவில்லை.  இலங்கையில் தமிழ் இனம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இன அழிப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் தொடக்கமாக அது அமைந்தது. 

இனமா? மொழியா?
இன்றும் தாய்த் தமிழகத்தில் தமிழ் மொழிக்காகக் குரல் கொடுக்க முன் வருகிறவர்கள், தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுக்க முன்வருவதில்லை.  மொழிக்காகக் குரல் கொடுக்கும்பொழுது சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை உள்ளத்தில் வைத்துக்கொள்ளலாம்.  இனத்திற்காகக் குரல் கொடுக்கும்பொழுது, சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை உள்ளத்தில் வைத்துக் கொள்ள இயலாது.  இனம் அழிக்கப்பட்டு விட்டால் யார் மொழியைப் பேசுவது?  இனம் அழிந்தால் மொழியும் அழிந்து போகும். 

யூதர்களின் சீயோனிய இயக்கம்
இனம் அழியாமல் பாதுகாக்கப்படுமானால் மொழி அழிந்த போதிலும் மீண்டும் அதற்குப் புத்துயிர் கொடுக்க இயலும் என்பதை உலகில் யூத இனம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. 
யூதர்களின் மொழி எபிரேயம்.  யூதர்கள் அவர்கள் நாட்டை இழந்த பொழுது உலகின் பல பாகங்களுக்கும் சிதறிச் சென்றனர்.  மொழி மறைந்தது.  மீண்டும் அவர்களுக்கு நாடு கிடைத்து ஒன்று கூடியவுடன் அவர்கள் தங்கள் மொழிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளனர் என்பதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம்.  பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் இனம் ஒன்றிணைந்ததற்குக் காரணமாய் இருந்தது அவர்களுடைய மதம்.  யூத மதம் யூத இனத்தை ஒன்றிணைத்தது.  யூத இனம் அழியாமல் பாதுகாத்தது.  யூதர்கள் மீண்டும் நாட்டைப் பெற்ற பொழுது, யூதர்களின் மொழிக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது.
 
இனத்தை அழியாமல் பாதுகாப்பது மதம்
ஆகவே, சிதறிக்கப்பட்டாலும் இனத்தை அழியாமல் பாதுகாப்பதற்கும் ஒன்றிணைப்பதற்கும் காரணமாய் இருப்பது மதம் என்பதையும் மதத்தால் ஒன்றிணைக்கப்பட்ட இனம், தனக்குரிய மண் ஆகிய நாடு கிடைத்துவிட்டால் அழிந்து போன தங்கள் மொழியை மீண்டும் உயிர் பெறச் செய்ய இயலும் என்பதையும் யூத இனம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக