1 ஆக., 2011

திருநீறா? சிலுவையா? - 6

திருநீறும் திருமண்ணும்
சைவர்கள் திருநீற்றால் தங்கள் அடையாளத்தையும் வைணவர்கள் திருமண்ணால் தங்கள் அடையாளத்தையும் தங்கள் நெற்றிகளில் இடுகின்றார்கள்.   சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னரே திருநீற்றிலிருந்து திருமண் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.  மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு மூன்றையும் திருநீறு விளக்கி நின்ற நிலையை முன்னர்ப் பார்த்தோம்.  
இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்னர் செங்கிடாரி கொல்லப்பட்டு, அதனுடைய தோல், தசை, இரத்தம் ஆகியவை சாணியுடன் சுட்டெரிக்கப்பட்டு திருநீறு தயாரிக்கப்பட்டது.  இது வெறும் நீறு அன்று.  சுத்திகரிக்கும் நீறு.  அதனால் திருநீறு ஆகிறது.  இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், தயாரிக்கப்படும் திருநீறு, சுத்திகரிக்கப் பயன்படும் திருநீறு அன்று.  
இயேசு கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் அறிவிக்கும் அடையாளமாக, பின்னர்த் திருநீறு விளங்குகிறது.  ஆகையால் கிறித்தவத்தில் திருநீறு தயாரிக்கப்படுவதற்குக் கிடாரி கொல்லப்படவோ, தோல், தசை, இரத்தம் எரிக்கப்படவோ அவசியம் இல்லை.  இவை எல்லாம் கிறித்துவுக்குள் நிறைவேறிவிட்டன.  அதனால் திருநீறு தயாரிக்க, கிடாரியின் சாணி எரிக்கப்பட்டாலே போதுமானது.  
சாணி எரிக்கப்பட்டால் அது நீறு ஆகுமே தவிர திருநீறாக எவ்வாறு ஆகும் என்று எண்ணலாம்.  கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் குறிக்கும் அடையாளமாக நெற்றியில் இடப்படுகின்ற காரணத்தால் அது வெறும் நீறு அன்று.  திருநீறாக மாறிவிடுகிறது.  
இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் கடவுளின்
1.   தந்தை நிலை
2.   மகன் நிலை
3.   பரிசுத்த ஆவிநிலை
ஆகிய மூன்று நிலைகளையும் உலகம் அறியும் வகை ஏற்பட்டது.  இந்த மூன்று நிலைகளையும் விளக்குவதற்காகத் திருநீற்றால் மூன்று கோடுகள் இடப்படுகின்றன.   
திருநீறு,சந்தனம்,குங்குமம்
இந்த மூன்று நிலைகளில், “மகன் மரத்தில் இரத்தம் சிந்தியதால் பாவ மன்னிப்பு ஏற்பட்டது” என்பதை விளக்க, மூன்று கோடுகளால் மகனைக் குறிக்கும் மையக் கோட்டின் மத்தியில் “மரத்தின் வழியாக இரத்தம் சிந்தினார்” என்பதைத் தெரிவிக்க, சந்தன மரத்தினாலாகிய சந்தனப் பொட்டும், அப்பொட்டின் மத்தியில் இரத்தத்தைக் குறிக்க சிவப்புக் குங்குமப் பொட்டும் இடப்பட்டு, இயேசு கிறித்துவின் நற்செய்தி முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது.  இது சைவத்தின் நிலை.  
சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னர் திருநீற்றிலிருந்து திருமண் அணியும் நிலை உருவாயிற்று.  அத்துடன் “இரத்தம் சிந்தி மீட்டெடுத்தார்” என்பதை விளக்க, “குங்குமப்பொட்டு வைப்பதை விட இரத்தம் வடிவதைக் காட்ட வேண்டும்” என்ற நிலை உருவாக்கப்பட்டது.  அதனால் நெற்றியில் படுக்கையாக இடப்பட்ட மூன்று கோடுகள் மாற்றப்பட்டு செங்குத்தாக மேலிருந்து கீழாக இடப்பட்டன.  மையக்கோடு இரத்தம் சிந்தும் கடவுளின் மகனாகக் காட்ட சிவப்புக் கோடாக மாற்றப்பட்டது.  மேலிருந்து இரத்தம் சிந்தப்பட்டதைக் காட்ட சிவப்புக் கோடு மேலே ஒடுக்கமாகவும் கீழே வரவர அகலமாகவும் அமைக்கப்பட்டது.  
அறிய இயலா நிலை
கிறித்தவத்தின் நற்செய்தியைத் தெளிவாக  வெளிக்காட்டும் இந்த அடையாளங்களைச் சைவப் பெருமக்களும் வைணவப் பெருமக்களும் தினந்தோறும் தங்கள் நெற்றிகளில் தவறாது இட்டுக்கொண்ட போதிலும், ஏன் இவ்வாறு அணிகின்றோம் என்று அவர்கள் அறிய இயலாத நிலை ஏற்பட்டது வருந்தத்தக்க ஒன்றாகும். 
பைபிளும் நெற்றியில் அடையாளமிடுதலும்
ஐரோப்பிய வழிக்கிறித்தவர்கள் நெற்றியில் அடையாளம் இடுவதில்லை.  தோமா வழிக்கிறித்தவர்களாகிய சைவர்களும் வைணவர்களும் நெற்றியில் அடையாளம் இடுகின்றார்கள்.  இது பைபிளுக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகின்றது. 
-    தொடரும்
(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?” என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக