1 ஆக., 2011

திருநீறா? சிலுவையா? - 1

“திருநீற்றுத் திருநாள்” என்று சிறப்பிக்கப்படுவது சாம்பல் புதன்கிழமை.  கிறித்தவத் திருநாள்களில் சாம்பல் புதன்கிழமை ஒரு முக்கியமான நாள் ஆகும்.  இயேசு கிறித்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் இவற்றை நினைவு கூர்ந்து அதற்கென நோன்பு மேற்கொள்ளும் தபசுகாலத்தின் தொடக்க நாள் திருநீற்றுத் திருநாள் அல்லது சாம்பல் புதன்கிழமை ஆகும்.

நீறு: திருநீறு
திருநீறு பூசும் வழக்கம்
“நீறு பூத்த நெருப்பு” என்பதிலுள்ள “நீறு” சாம்பலைக் குறிக்கிறது.  வழிபாட்டில் “நீறு” சிறப்பிக்கப்படும்பொழுது ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்று அது “திருநீறு” ஆகிறது.  ஆகவே சாதாரண சாம்பல், வழிபாட்டோடு தொடர்புபடுத்தப் படும்பொழுது  அது “திருநீறு” ஆகிறது.  திருநீற்றுத் திருநாள் அன்று கிறித்தவர்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளும் வழக்கம் உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவப் பிரிவு மக்களிடையே இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளம்
இயேசு கிறித்துவின் பாடு,மரணம், இவற்றைத் தியானம் செய்யும் காலமாக திருச்சபை அட்டவணையில் நாற்பது நாட்கள் ஒதுக்கப்படுகின்றன.  இதை “தபசுகாலம்” என்று குறிப்பிடுவர்.  தபசு காலத்தின் தொடக்க நாள் “திருநீற்றுத் திருநாள்” எனக் குறிக்கப்பட்டு அன்று நெற்றியில் சாம்பல் பூசப்படுகின்றது.  துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகச் சாம்பல் பூசிக் கொள்வதையும் சாம்பலில் உட்காருவதையும் பழைய ஏற்பாடு கூறுகிறது.  (II சாமு 13:19, எசுதர் 4:3, யோபு 2:8)

மனந்திரும்பலின் அடையாளம்
மனந்திரும்பலை வெளிப்படுத்தும் அடையாளமாகச் சாம்பலில்  உட்காருவதையும் சாம்பலைப் பூசிக் கொள்ளுவதையும் பற்றிய குறிப்புகளை நாம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பார்க்கின்றோம்.  (யோனா 3:6, மத்தேயு 11:21, உலூக்கா 10:13)

பாவம் நீக்கும் சாம்பல் அல்லது திருநீறு
பாவம் போக்கும் திருநீறு
பாவம் நீக்கும் பரிகாரப் பொருளாக இரத்தமும் சாம்பலும் விளங்குவதைப் புதிய ஏற்பாடு கூறுகின்றது.  “வெள்ளாட்டுக் கடாக்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்பொழுது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்”. (எபிரேயர் 9:13)
                                    
                                               -       தொடரும்

(உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் புத்தகத்தில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக