6 ஆக., 2011

திரு - அண்ணாமலையார் திருக்கோயில் தீட்டுப்பட்டது உண்மை தான்!

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரை போல் வாடிப் போனார்கள் என்னுடன் பயின்ற சக அர்ச்சக நண்பர்கள்.
காரணம் நாங்கள் அர்ச்சகருக்குப் பயிற்சி எடுத்த சக்தி விலாச சபா மண்டபத்தின் (திருவண்ணாமலையார் திருக்கோயிலில்) முகப்புத் தோட்டப் பகுதியில் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையும், பிள்ளையார் சிலையையும் கண்டு, ஒழுங்கான பராமரிப்பும் சரிவரப் பூசைகளும் இல்லாத அவலநிலையில் காட்சி அளித்த அந்த (கோயில் பிராமண அர்ச்சகர்களால் ஒதுக்கப்பட்ட) சிலைகளுக்குச் சைவாகம விதிப்படி பூசையும், அர்ச்சனையும், அலங்காரமும் செய்து தொழுது வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறிய மறுநாள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது'அர்ச்சகர் பள்ளி’.
கிழித்தெறியபட்டிருக்கிறது முகப்பு அட்டை வாசகங்கள், யார் இதைச் செய்தது, எந்தக் கொடியவர்கள் அரங்கேற்றிய நிகழ்ச்சி இவை? ஆம்! அன்றொருநாள் நாங்கள் அர்ச்சகருக்குப் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபொழுது அர்ச்சகர் பயிற்சியை நிறுத்த, சதி செய்து எங்கள் ஆசிரியரை, 80 வயது மதிக்கத் தகுந்தவரை கொலை வெறியோடு தாக்குதல் நடத்திய அதே திருக்கோயில் பிராமண அர்ச்சகர்களும் அவர்களாலே தூண்டி விடப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.  மற்றும் இந்து முன்னணி அமைப்பினரும் தான் இந்தக் கொடிய செயலை, சக்தி விலாச சபா மண்டபத்தில் நிகழ்த்தியுள்ளார்கள்! இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் சக்தி விலாச சபா மண்டபத்தில் இருந்த சிலைகளைத் தொட்டு இங்கு பயின்ற மாணவர்கள் பூசை செய்ததனால் அச்சிலைகள் தீட்டுபட்டுவிட்டன என்பது!!
 சைவ ஆகமங்களிலும், சைவ சித்தாந்தங்களிலும், சொல்லப்படாத சாதி ஏற்றத்தாழ்வை, தாங்கள் திருத்தி எழுதிய மனுநூலைக் கொண்டு நிலை நிறுத்த முயலுகிறார்கள் திருமூலர் குறிப்பிட்ட அந்தப் போலி பார்ப்பனர்கள்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அர்ச்சகர்ப் பணி செய்து வந்த ஆதி மூத்த குடி தமிழ்ப் பரம்பரையின் வழி வந்த நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் கொலை செய்துதான் இந்த ஆரிய பிராமணர்கள் சைவ, வைணவத் திருக்கோயில்களை ஆக்கிரமித்தார்கள் என்பதே வரலாறு நமக்கு காட்டும் மிகப்பெரிய உண்மை.
சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் நான்கு வகைத் தொழில்கள்: அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இவை தொழிலில் உள்ள வேற்றுமையே தவிர, சாதிப் பிரிவுகள் அல்ல.
ஆக முற்றிலும் இறைக் கொள்கையை ஏற்காது நானே கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்ற பேய் கொள்கையைப் பின்பற்றுகிற, இறைவனுக்கு முற்றிலும் முரணான (தீட்டான) ஆரிய பிராமணர்கள் என்றைக்கு சைவ, வைணவ திருக்கோயில்களில் உள்ள சிலைகளுக்குப் பூசை செய்தார்களோ, அன்றைக்கே அந்த புனிதமான சிலைகளும் தீட்டுபட்டுபோயின. அவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ திருக்கோயில்களும் தீட்டு பட்டுபோய்தான் கிடக்கின்றன. ஆகவே திரு - அண்ணாமலையார் திருக்கோயில் தீட்டுப்பட்டது உண்மைதான்! உண்மைதான்! அந்தத் தீட்டு (முரண்) விரைவில் நீங்கப் போகிறது. தமிழர்கள் அர்ச்சகர்களாகி அந்தத் தீட்டை களையவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
[முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “தமிழர் சமயம்” 2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -12இல் வந்த செய்தி இங்கு வெளியிடப்பட்டுள்ளது]

PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக